
[ ஞாயிற்றுக்கிழமை, 16 ஒக்ரோபர் 2011, 02:58.49 PM GMT ]
நான்காம் கட்ட (2006) ஈழப் போரில் முதன் முதலாக இடம்பெயர்ந்த சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா, கடற்கரைச்சேனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் மக்கள் இன்றுவரை மீள்குடியேற்றப்படாமல் கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைபறிச்சான் ஆகிய இடங்களில் உள்ள அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இம்மக்களின் வளமான வாழ்விடங்களும் வயல் வெளிகளும் கொங்கிரீட் வேலி போட்டு அடைக்கப்பட்டு மக்கள் உட்செல்வதற்கு தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் 2007 ஆம் ஆண்டு சம்பூர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகத் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றமானது தனது தீர்ப்பில் பாதுகாப்பு வலயப் பிரகடனத்தின் நோக்கம் திருகோணமலைத் துறைமுகத்திற்கு போதிய பாதுகாப்பினை வழங்குவதேயொழிய மக்களின் வாழ்விடம் மற்றும் தொழில் உரிமைகளை மறுப்பதற்காக அல்ல எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து இப்பிரதேசம் விடுவிக்கப்பட்டுள்ளது எனவும் மீள்குடியேற்றமும் அபிவிருத்தியும் ஒரு திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெற வேண்டும் எனவும் கூறியுள்ளது.
அத்துடன் மீள்குடியேற்றம் இடம்பெற்றவுடன் பொது மக்களுக்கு உதவி செய்ய விரும்பும் குழுக்கள் மக்களின் புனர்வாழ்விற்கு உதவி புரிவதற்கான வழியும் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இவ்வாறிருக்கையில், சம்பூர் பிரதேச மக்களை வேம்படித்தோட்டம், இத்திக்குளம், இறால்குழி மற்றும் வீரமாநகர் ஆகிய குடிப்பதற்குக் கூட நீர் கிடைக்காத இடங்களில் குடியேறுவதற்கு இணங்குமாறு தொடர்ச்சியான அழுத்தங்கள் இடம் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் இந்திய இலங்கை அதிகாரிகளுக்கிடையே சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்த்தம் கைச்சாத்தாகிய பின்னர் இம்மக்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

ஒரு முன்னாள் இராணுவ அதிகாரியாகிய திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் முன்னாள் கடற்படை அதிகாரியாகிய கிழக்கு மாகாண ஆளுநரும் மக்களை வேறு இடங்களில் குடியேறுவதற்கு இணங்குமாறு தமது அழுத்தங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இரவு நேரங்களில் இராணுவத்தினர் முகாம்களுக்கு சென்று முகாம் தலைவர்களையும் மக்களையும் வேறு இடங்களில் குடியேறுவதற்கு இணங்குமாறு வற்புறுத்துகின்றனர்.
சம்பூர் பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இந்திய உதவியுடன் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் என்னும் செய்தி 2006 ம் ஆண்டில் வெளியாகியபோதும் அம்மக்களின் பிரதிநிதிகளாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையானது இம்மக்களின் பிரச்சினை தொடர்பாக இதுவரை காத்திரமான எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
உண்மையில் மக்களுக்குத் தேவையானது அவர்களது வாழ்விடங்களேயொழிய வெறும் அறிக்கைகள் அல்ல. ஏனெனில் சம்பூரில் பத்தாயிரம் ஏக்கர் காணிகள் அபகரிப்புச் செய்யப்பட்டு பத்தாயிரம் மக்களின் வாழ்வும் பறிபோகிக் கொண்டிருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையானது இன்றுவரை சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவுமில்லை இதை ஒரு அதிமுக்கிய பிரச்சினையாகக் கருதி பாராளுமன்றத்தில ஒரு நாள் விவாதத்தினைக் கோரி இப்பாரதூரமான பிர்ச்சினை பற்றி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த முற்படவுமில்லை.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியதற்கு மாறாக இன்று வரை சம்பூர் பிரதேச மக்களின் மீள் குடியேற்றம் இடம் பெறவில்லை. இம்மக்களை பிரநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையானது இப்பிரச்சினையினை மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு இன்றுவரை கொண்டு போய் சம்பூர் பிரதேச மக்களுக்கு ஒரு தீர்வினை பெற்றுத்தர முற்படாமைக்கான காரணம் யாது என்பது பற்றி இன்றுவரை சம்பூர் பிரதேச மக்களுக்குப் புரியவில்லை.
அனல் மின் நிலையத்திற்கு 500 ஏக்கர் காணிகள் எடுக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கையில் 500 ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ள முறை பற்றியோ அல்லது எஞ்சிய 9500 ஏக்கருக்கு என்ன நடக்கப் போகின்றது என்பது பற்றியோ எதுவும் பேசாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை மௌனம் காப்பது யாருக்காக? ஏதற்காக? தமக்கு வாக்களித்த மக்களைவிட இவர்களுக்கு முக்கியமானவர்கள் யார்? அது ஏன்?
தம் மீதான இராணுவத்தினரின் அண்மைக்கால அழுத்தங்கள் தொடர்பாகவும், தமது மீள்குடியேற்றம் பற்றி அறிந்து கொள்வதற்காகவும் சம்பூர் பிரதேச மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையுடன் தொடர்பு கொள்ள முற்படும் போது தொலைபேசி மணி அடிக்கின்றது. ஆனால் எடுப்பார் யாருமில்லை.
தேர்தல்கள் ஏதேனும் அறிவிக்கப்பட்டவுடன் வடகிழக்கு முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் வாக்குக் கேட்போர் மக்கள் பிரச்சினைக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் போது தொடர்பு கொள்ள முடியாதவர்களாக ஆகிவிடுவது அரசியலின் பொய் வேடத்தினை நன்றாகவே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
எல்.சிவலிங்கம்
lsivalingam22@gmail.com
Source from: Tamilwin.com