Home »
» We want our land, people from six villages of Mullaithivu handed over the Petition to the Divisional Secretary
We want our land, people from six villages of Mullaithivu handed over the Petition to the Divisional Secretary
Written By Joining Hands Network on Tuesday, June 18, 2013 | 10:19 PM
எமது நிலம் எமக்கு வேண்டும்: முல்லைத்தீவில் 6 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெலிஓயா பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்க ஏற்பாடு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 01:39.21 PM GMT ]
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள்,தமது பூர்வீக நிலங்களை தருமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு தலைமையில் வெலிஓயா பிரதேச செயலருக்கு மகஜர் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள் சார்பில் கையளிக்கப்படவுள்ள மேற்படி மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேற்குறித்த ஆறு கிராமங்களிலும் வசித்துவரும் மக்களில் 90 வீதமானோர், கொக்கிளாய் வாவிக்கு மேற்கு பக்கமாகவுள்ள (அநுராதபுரம் மாவட்டத்துக்குட்பட்ட 9 சிங்கள கிராமங்களை ஒருங்கிணைத்து, முல்லைத்தீவில் 2011ம் வருடம் வெலிஓயா எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டு தனிச் சிங்களப் பிரதேசமாக்கப்பட்டுள்ள பகுதியாகும்.) தமது பூர்வீக நில புலங்களில் நெற்செய்கையை தமது வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொண்டு வந்துள்ளார்கள். விவசாய செய்கையே இந்த மக்களின் வாழ்வின் சாரமும், வாழ்வின் ஆதாரமுமாகும்.
பரம்பரை வழித்தோன்றலாக தமது பூர்வீக நிலபுலங்களில் உழுது, உண்டு, உழைத்து, மகிழ்ந்து வாழ்ந்திருந்த தாம், 1983ம் வருடம் ஏற்பட்ட கலவரங்களினால் எல்லைக் கிராமங்களில் ஏற்பட்ட அச்சம் மற்றும் அசாதாரண நிலைமைகள் காரணமாக தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி, மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும், மாவட்டத்துக்கு வெளியேயும் வாழ்ந்து வந்ததாகவும், 2008-2009ம் வருடங்களில் சிறீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட வன்னி மீதான இறுதி யுத்தம், தமது இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக சிதைத்தது மட்டுமல்லாமல், மாவட்டத்தை விட்டே தம்மை வெளியேறச்செய்ததாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், 2012 ஜனவரி 19 அன்று முல்லை.கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் மீளக்குடியமர தமக்கு அரசு அனுமதி வழங்கியதோடு, தமது விளைநிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
வெலிஓயா எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டு தனிச்சிங்கள பிரதேச செயலர் பிரிவாக்கப்பட்டுள்ள பகுதிக்குள், தமது 2590 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் (நெற்செய்கை காணிகள்) அகப்பட்டுள்ளதாகவும், இதுவொரு திட்டமிட்ட நில அபகரிப்பெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கவினால் தமது காணிகளுக்கு வழங்கப்பட்ட சட்டரீதியான காணி அனுமதிப்பத்திரங்கள் தம்மிடமிருப்பதாகவும், எனவே தமது நிலம் தமக்கே வேண்டுமெனவும் அவர்கள் குறித்த மகஜரில் தெரிவித்துள்ளனர்.
Source from: Tamilwin.com