Home »
» People who are still not allowed to resettle in Mugamali have been suffering for Habitats.
People who are still not allowed to resettle in Mugamali have been suffering for Habitats.
Written By Joining Hands Network on Tuesday, June 18, 2013 | 10:28 PM
மீள்குடியேற அனுமதிக்கப்படாத முகமாலை மக்கள் தங்கியிருக்க இடமின்றி நடுத்தெருவில் தவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 08:37.16 AM GMT ]
கிளிநொச்சி- பளை பிரதேசத்தில் ரயில் பாதையில் தங்கியிருந்த முகமாலை பிரதேசத்தில் மீள்குடியேற அனுமதிக்கப்படாத கிராமங்களைச் சேர்ந்த மக்களை ஒருவார காலத்தினுள் வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றிடமின்றி தாம் நடுத்தெருவில் விடப்பட்டிருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
முகமாலை- அம்பளைவளை, இந்திராபுரம் போன்ற யுத்தம் நடைபெற்ற சில பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்படாமையினால் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை.
குறித்த பிரதேசங்களில் 1996ம் ஆண்டு இடப்பெயர்விற்கு முன்னதாக சுமார் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவந்தன.
இந்நிலையில் தற்போது பெரும்பாலான குடும்பங்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் பல பகுதிகளில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் நிலையில் சுமார் 35வரையான குடும்பங்கள் தற்போது பளை பிரதேசத்திலுள்ள ரயில் பாதையில் தங்கியிருக்கின்றனர்.
இவர்களை ஒருவார காலத்தினுள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு பணித்துள்ள அதிகாரிகள் வடக்கிற்கான ரயில் பாதை அமைப்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இது தவிர்க்க முடியாததெனவும் கூறியிருக்கின்றனர்.
எனினும் மக்களுடைய பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படாமையினால், மீள்குடியேற்றத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் உறவினர், நண்பர்கள் வீடுகள் கூட இல்லாத நிலையில் மக்கள் எங்கு செல்வதென தெரியாத நிலையில் உள்ளனர்.
மேலும் தமது சொந்தப் பிரதேசங்களில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்படாத நிலையில், தற்காலிகமாக நீண்டகாலம் வாழ்ந்துவந்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்றும் அதிகாரிகள் பொறுப்பாக தமக்கான மாற்றிடங்களை வழங்கவில்லையென குற்றம்சாட்டியுள்ளனர் மக்கள்.
அத்துடன், தம்மை அதிகாரிகளும், பொறுப்புவாய்ந்த அரசியல்வாதிகளும் நடுதெருவில் விட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளதுடன், முகமாலை பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அரச காணிகளில் தம்மை தற்காலிகமாகவேனும் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இதேவேளை மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத அல்லது கண்ணிவெடியகற்றப்படாத பகுதி என கூறப்படும் மேற்படி அம்பளைவளை, மற்றும் இந்திராபுரம் ஆகிய கிராமங்களில் எழுதுமட்டுவாழ் பகுதியூடாக வரும் சில கும்ல்கள் நுழைந்து பெறுமதியான மரங்கள், மற்றும் கைவிடப்பட்ட காவலரண்களிலுள்ள மரங்கள், இரும்புகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் எவ்வாறு அந்தப் பகுதிக்குள் செல்கின்றனர் என கேள்வியெழுப்பியுள்ள மக்கள் அந்த விடயம் குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
source from Tamilwin.com