Home »
» முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசச் செயலரின் செயலுக்கு மக்கள் விசனம்
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசச் செயலரின் செயலுக்கு மக்கள் விசனம்
Written By Joining Hands Network on Monday, January 20, 2014 | 9:15 PM
முல்லைத்தீவில் 4000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் காணிகள் இல்லாமலிருக்கிற நிலையில், அரச அமைச்சர் ஆதரவுடன் புத்தளத்திலிருந்து பேருந்துகளில் வரவழைக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட 3000 முஸ்லிம் மக்களை காணிகள் அற்றவர்கள் என பிரதேச செயலர் திரேஸ்குமார் பதிவு செய்துள்ளார்.
ஓட்டுசுட்டானில் திரேஸ்குமார் பிரதேச செயலாராக இருந்த போது ஆற்றுமணல், கருங்கல் உள்ளிட்ட வளங்கள் மற்றும் பல்வேறு விடயங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் காரணமாக, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் புலன்விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு இக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் மட்டக்களப்புக்கு இடம்மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வேளையில் இவருக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் இடையில் ஏற்பட்ட பேரம் பேசலின் விளைவாக இவர் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலராக நியமனம் பெற்றார்.முஸ்லிம் மக்களுக்கு முல்லைத்தீவில் காணிகள் வழங்கும் நோக்கிலேயே ரிசாத் பதியுதீன் இவரை கரைத்துறைப்பற்று பிரதேச செயலராக கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் கரைத்துரைப்பற்றுக்கு வருவதற்கு முன்பாகவே முஸ்லிம் மக்களுக்கு மட்டும் காணி வழங்கவென 1544 பேருக்கு காணி ஆணையாளர் நாயகத்தால் அனுமதி வழங்கப்பட்டு காணி வழங்கல் விசாரணையும் நடத்தப்பட்டு 661 பேர் தெரிவாகி விளம்பரப்பலகையில் பகிரங்கமாக விளம்பரப்படுத்தப்பட்டனர். மீதி முஸ்லிம்கள் 883 பேரும் புத்தளத்திலும் வேறு இடங்களிலும் காணியும் வீடும் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டு நிராகரிக்கப்பட்டு இருந்தது.
தெரிவு செய்யப்பட்டதாகவுள்ள 661 முஸ்லிம் மக்களிலேயே சுமார் 400க்கு மேற்பட்டவர்கள் புத்தளத்திலும் புல்மொட்டியிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்களென இனம் காணப்பட்டும் அரசியல் பழிவாங்கல் காரணமாக காணியற்ற முஸ்லிம் மக்கள் பலருக்கே காணி கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் திரேஸ்குமார் வந்ததும் 2014/01/20, 21 ஆம் திகதிகளில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்களை புத்தளத்திலிருந்து பஸ்களில் வரவழைத்து மேற்படி 883 பேர் உட்பட சுமார் 3000 இற்குமேற்பட்ட முஸ்லிம் மக்களை காணியற்றவர்களாக பதிவு செய்துள்ளார். இதன் போது காணி அற்றவர்களென சென்ற தமிழ் மக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதே வேளை குறித்த தமிழ் மக்கள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் இது குறித்து முறையீடு செய்துள்ளனர். இதையடுத்து மக்களுடன் இது குறித்து விவாதிக்க நேற்று மாலை ரவிகரனால் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
இதையடுத்து கூட்டத்தையும் இராணுவப் புலனாய்வாளர்களின் துணையுடன் தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இருந்தும் அப்பகுதிக்கு சில மக்கள் வந்திருப்பதை அறிந்த ரவிகரன், அங்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன் பின்பு அவர் தெரிவிக்கையில், கிட்டத்தட்ட முல்லைத்தீவு கரைத்துரைப்பற்றில் மட்டும் காணி அற்ற தமிழ் மக்கள் 4000 பேருக்கு மேல் உள்ளனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின்படி அரசாங்கத்தின் காணி வழங்கல் கொள்கையானது, ஒரு பிரதேசத்தில் இனவிகிதாசாரம், இனப்பரம்பல் கோலம் என்பவற்றை மாற்றுவதாக அமைந்துவிடக்கூடாது எனப்பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தை சொந்த இடமாகக் கொண்ட காணி அற்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
ஆனால் இன்று இங்குள்ள தமிழ் மக்கள் காணி அற்றவர்களாக அலைந்து திரிய வேண்டிய நிலை தான் காணப்படுகிறது.